Wednesday 19 November 2014






நீங்கள் செல்வந்தராக ஒரு யோசனை!!!!!


எப்படி சேட்டுக்கள், மார்வாடிகள் எல்லாத் தலைமுறையிலும் செல்வந்தர்களாகவே இருக்கின்றனர் ?எப்படி டாடாவும் பிர்லாவும் கோடிக்கணக்கில் சம்பாதிக்கின்றனர்?இப்படி ஒருநாளாவது நீங்கள் சிந்தித்ததுண்டா ?
அவர்கள் தங்களது மாத வருமானத்தில் ஒரு பங்கை அந்த மாதமே அன்னதானம் செய்வதற்கு ஒதுக்கி அந்த மாதமே அன்னதானம் செய்துவிடுகின்றனர். இரண்டாவதாக, வீட்டை எப்போதும் குப்பைக்கூளம் இல்லாமலும், கெட்ட வாசனை அடிக்காமலும் பார்த்துக்கொள்கின்றனர்.அதாவது, வீட்டில் நறுமணம் எப்போதும் கமழுமாறு பார்த்துக்கொள்கின்றனர்.( எங்கே நறுமணம் உண்டோ அங்கே அஷ்ட லட்சுமிகளும் வாசம் செய்கிறார்கள்)
மூன்றாவது தான் இப்போது நாம் பார்க்கப்போவது . . ,
அமாவாசை ஆண்களை அதிகம் பாதிக்கிறது.பவுர்ணமி பெண்களை அதிகம் பாதிக்கிறது. அனைத்து உயிரினங்களையும் இந்த இரண்டு திதிகளும் பாதிக்கின்றன .சந்திரன் ஸ்தூல உடலையும், சூரியன் சூட்சும உடலையும் பாதிக்கின்றது. வளர்பிறையில் பிரதமை முதல் பவுர்ணமி வரை 15 திதிகளும், தேய்பிறையில் பிரதமை முதல் அமாவாசை வரை 15 திதிகள் உள்ளன. திதிகள் என்றால் கலைகள் என்றும் பெயர்ப்படும். 16 வதாக ஒரு கலை இருக்கின்றது.அதுதான் சோடேசகலை!
இந்த சோடேசக்கலையைப் பயன்படுத்தித்தான் சித்தர்கள், துறவிகள், மகான்கள்,செல்வந்தர்கள், சேட்டுகள், மார்வாடிகள் என வாழையடி வாழையாக செல்வந்தர்களாக இருக்க முடிகின்றது.தமிழர்களாகிய நாமும் ஏதாவது ஒரு சித்தர் அவர்களின் வழிவம்சமாகத்தான் இருக்கிறோம். இதை அறியும் வரை தின வாழ்க்கையே சோதனையாக இருக்கின்றது.அறிந்ததுமுதல் நிம்மதி,செல்வ வளம், மகிழ்ச்சி,என வாழ்க்கைப்பாதை திசைமாறிவிடுகின்றது.

பிரம்மா, விஷ்ணு,சிவன் இம்மூவரின் அம்சமானவர்தான் திருமூர்த்தி ஆவார். இவர் இந்த சோடேசக்கலையில் தனது அருளை சில நொடிகள் மட்டுமே பொழிகிறார்.சுமார் ஐந்து நொடிகள் அதாவது ஐந்து சொடக்குப் போடும் நேரம் மட்டும் திருமூர்த்தியின் அருள் உலகம் முழுவதும் பரவும்.திருமூர்த்தியை கிறிஸ்தவர்கள் Trinity எனச் சொல்வார்கள். இந்த 16 வது கலையை சித்தர்களும்,முனிவர்களும் அறிந்திருந்ததால்தான் அவர்கள் விரும்பும் எந்த ஒன்றையும் பெற முடிகிறது.
.
அமாவாசை எப்போது முடிகிறது என்பதை உள்ளூர் பத்திரிகைகள் டிகிரிப்படி கணித்து வெளியிடும். அதைக் கவனத்தில் கொள்ள வேண்டும். உதாரணமாக, அமாவாசை காலை மணி 10.20 வரை. பின் பிரதமை திதி ஆரம்பம் என எழுதியிருப்பார்கள் அமாவாசை திதி முடிவதற்கு ஒரு மணி நேரத்துக்கு முன்பே அதாவது காலை 9.20 மணி முதல் 11.20 மணி தியானத்தில் அல்லது மந்திர ஜபத்தில் இருக்க வேண்டும்.இந்த இரண்டு மணி நேரத்திற்குள் சுமார் 5 நொடிப் பொழுதுகள் திருமூர்த்தியின் ஆளுகைக்குள் இந்த மொத்தப் பிரபஞ்சமும் வரும்.
பிரபஞ்சத்தில் உள்ள அத்தனை அண்டங்களும் சகல உயிரினங்களும் ( பாக்டீரியா, புல், பூண்டு ,மரம்,யானை, திமிங்கலம்,சிறுத்தை, கழுதை,புலி,முயல்,மான்,பாம்பு, நீர்யானை,நட்சத்திர மீன்,கணவாய் மீன், கடல்பசு,கடல் பாசிகள், ஒட்டகம், ஒட்டகச்சிவிங்கி,பூரான்,பல்லி, ஆந்தை, புறா, கிளி, காட்டெருமை, காண்டாமிருகம், நாய், குதிரை,கழுதை,கோவேறுக்கழுதை,எறும்பு, சுறா மீன் ), ஒவ்வொரு மனிதனும் சூட்சுமமாக அதிரும். அந்த நேரம் மனதால் நாம் என்ன வேண்டுகிறோமோ அது கிடைக்கும்.கோரிக்கை ஒன்றாக இருக்க வேண்டும்.பலவாக இருக்கக்கூடாது.ஒன்று நிறைவேறிய பின் மற்றதை வேண்டலாம். இதேமாதிரிதான் பவுர்ணமி முடிந்து பிரதமை திதி ஆரம்பிக்கும்போதும் செய்ய வேண்டும். மாறிமாறி தொடர்ந்து இப்படி தியானம் அல்லது ஜபம் செய்யும் போது சில மாதங்களில் நமது கோரிக்கை நிறைவேறும்.சிலருக்கு ஒரே தடவையில் (கேட்டது) கிடைத்துவிடும்.இது அவரவர் உடல் பூதியத்தைப் பொறுத்தது. மனவலிமையைப் பொறுத்தது. திருமூர்த்தி சாதனை செய்வோருக்கு ஒலியாகவோ,ஒளியாகவோ அருள் வழங்குகிறார்.
தியானம் வீட்டிலோ, கோயிலிலோ இருக்க வேண்டும். தியானம் செய்யும் நேரம் அமைதியாக இருப்பது அவசியம்.வெறும் தரையில் உட்காரக்கூடாது. வயிறு காலியாக இருக்க வேண்டும். சைவ உணவு ஆன்மீக மன நிலையை உருவாக்கும். (அசைவ உணவு அதற்கு எதிரானநிலையைத் தரும்) .நிமிர்ந்து ஏதாவது ஒரு ஆசனத்தில் இருக்கலாம்.உடைகள் இறுக்கமாக இருக்கக் கூடாது. மனக் கவனத்தை புருவ மத்தியில் அல்லது மூக்கின் நுனியை நோக்கி இருக்க வேண்டும்.வாசியோகம் அல்லது ஏதாவது ஒரு மந்திர ஜபம் மனதுக்குள் உதடு அசையாமல் செய்யலாம்.மன ஒருமைப்பாட்டில் தேர்ச்சி உள்ளவர்களுக்கு மேற்சொன்ன இரண்டும் தேவையில்லை. அமைதியுடன் வடகிழக்குப் பார்த்து கோரிக்கையை ( திருமணம், பணக்காரனாவது, நோய் தீர, கடன் தீர,எதிர்ப்புகள் விலக, நிலத்தகராறுதீர, பதவி உயர்வு கிடைக்க, பிரிந்தவர் சேர ,வழக்கு வெற்றி எதுவானாலும், ஏதாவது ஒன்று மட்டும்) நினைத்த வண்ணம் கண்களை மூடி இருந்தால்போதும்.தியான நேரம் பட்டினி இருந்தால் கிரகக்கதிர்வீச்சுக்கள் நம்மை அதிகம் பாதிக்காது. இந்த தியானத்தை ஜாதி, மதம்,இனம், மொழி கடந்து மனிதராகப்பிறந்த எவரும் செய்யலாம்.

பௌர்ணமி & அமாவாசை அன்று தியானம் செய்யவேண்டிய தேதி,.மற்றும் நேரம் !
பௌர்ணமி அன்று தியானம் செய்யவேண்டிய தேதி 16.03.2014 இரவு 10.39முதல் 12.39.வரை ---15.04.2014 மதியம் 12.49 முதல் 2.49.வரை ---15.05.2014.இரவு 12.11.முதல் 02.11.வரை ---13.06.2014 காலை 09.09 முதல் 11.09.வரை ---12.07.2014 மாலை 04.45 முதல் 06.45 வரை ---11.08.2014 இரவு .11.50.முதல் 01.50.வரை ---09.09.2014 காலை 07.21.முதல் 09.21.வரை ---08.10.2014 மாலை 04.10.முதல் 06.10.வரை ---07.11.2014 இரவு 03.20முதல் 05.20வரை ---06.12.2014 மலை 05.08 முதல் 07.08 வரை

அமாவாசை அன்று தியானம் செய்யவேண்டிய தேதி 31.03.2014.இரவு 12.11.முதல் 02.11.வரை ---29.04.2014 மதியம் 11.18.முதல் 01.18 வரை ---29.05.2014.இரவு 11.25 முதல் 01.25 வரை--- .27.06.2014 மதியம் 01.01 முதல் 03.01 வரை .---27.07.2014 இரவு 03.48.முதல் 05.48.வரை ---25.08.2014 இரவு 07.28 முதல் 09.28 வரை ---24.09.2014.மதியம் 11.25.முதல் 01.25.வரை ---24.10.2014.இரவு 02.46.முதல் 04.56.வரை ---22.11.2014.மாலை 05.32.முதல் 07.32.வரை ---22.12.2014 காலை 06.41முதல் 08.41.வரை 




























Saturday 25 October 2014


தந்தை இருந்தும்  
தாயும் இருந்தும்  
சொந்தம்  எதுவுமில்லே !..



மனதைத் தொடும்  பாடல் வரிகள் ..
சிந்து பைரவி என்ற திரைப்படத்திலிருந்து !

இந்த வரிகள்  ஒரு கற்பனைக் கதைக்காக  எழுதப் பட்ட
பாடல் வரிகளா ?  அல்லது  அந்த  பாடலாசிரியாரின்  உள்ளத்தில்
எழுந்த குமுறல்களா ?


2014,  June  மாத   இறுதியில் ,   திரு. வை. கோபாலகிருஷ்ணன்          அவர்களால் , சிறுகதை  விமர்சனப் போட்டிக்காக வெளியிடப்பட்ட
சிறு கதை " தாயுமானவள் " .


இந்த கதையும் , கதையின் கருத்தும்  என்னுள் மிகுந்த  தாக்கத்தை  ஏற்படுத்திவிட்டது !

இந்த போட்டியில்  கலந்து கொள்ள  விமர்சனம் எழுத முயற்சித்தேன் !
முடியவில்லை !

படிக்கும்  வாசகனின்  மனதில்  ஒரு  தாக்கத்தை  ஏற்படுத்தக்கூடிய ,
ஏற்படுத்திய  அழகான  கருவை,  மிக மிக  நேர்த்தியாக , அழகான
வரிகளில்  வெளியிட்டிருந்தார் , திரு. திரு. வை. கோபாலகிருஷ்ணன்  
அவர்கள் !

பல  கதைகளை எழுதி,  பரிசு பெற்றிருக்கும் கதாசிரியரை , இதற்காக
பாராட்டப் போவதில்லை .....!

மாற்றாக,

நன்றி  கூறிக்கொள்கிறேன் !

என்னை துணிந்து ஒரு முடிவு எடுக்க  ஊக்குவித்தது,
திரு. வை. கோபாலகிருஷ்ணன்  அவர்களின்  " தாயுமானவள் "
என்ற சிறுகதை !

இன்று, என் சிறிய குடும்பத்தில் , 10ஆம் வகுப்பில் படித்துக்கொண்டிருக்கும்
ஒரு இளம் பெண்  வளைய வந்து கொண்டிருக்கிறாள் !

மிகச் சரியானதொரு  சமயத்தில் , " தாய்மானவள் " என்ற
சிறந்த கதையை பதிவிட்டு, என்னை ஊக்குவித்த
திரு. வை. கோபாலகிருஷ்ணன் அவர்களுக்கு ,
என் மனமார்ந்த நன்றிகள் !
































Saturday 14 June 2014


" முன்னெச்சரிக்கை முகுந்தன் ! "   ( VGK 20  )

எந்த  வேலையை செய்தாலும்  அதற்கு  முன் எச்சரிக்கை தேவைதான்.  இதில்  தவறுவதால் ஏற்படும்  சங்கடங்கள்  எல்லோர்  வாழ்க்கையிலும்  ஏதாவது  இருக்கும் . இதில்  கிடைக்கும் அனுபவங்கள்  சிலருக்கு  வேடிக்கையாக இருக்கும் , சிலருக்கு வேதனையாக இருக்கும்.  இதைத்தான்  உணர்த்தியிருக்கிறார கதாசிரியர், தன்னுடைய " முன்னெச்சரிக்கை  முகுந்தன் " என்ற கதையில். 

அதற்கான இணைப்பு:-  


என்னுடைய  விமர்சனம்  இரண்டாம்  பரிசை  வென்றிருக்கிறது !
என்  எழுத்தினை  தேர்வு செய்து, பரிசுக்கு  உரியதாக்கிய  திரு . நடுவர்  அவர்களுக்கும், 
கதாசிரியர்  திரு. VGK   அவர்களுக்கும்  என் மனமார்ந்த நன்றிகள் !


என் எழுத்துக்கள் !


கதாநாயகனுக்கு  ஐம்பது வயது ! சில வியாதிகளுடன்,  ஞாபக மறதியும்  வேறு ! ஞாபக மறதியினால் வரும்  தொல்லைகளைப் போக்க , கதா நாயகன்  கையாண்ட  யுக்திதான்       " செக் லிஸ்ட் " .  

அலுவலகத்திற்கு  செல்லும்  அவசரத்தில், மறந்து போகும்  விஷயங்கள் பல ! பர்சை  மறப்பது , அலுவலக / மேஜை ட்ராயரின்  சாவியை மறப்பது, சில முக்கியமான பைல்களை  வீட்டிலேயே  வைத்து விட்டு வருவது  அல்லது அதற்கு பதிலாக  வேறு  எதையாவது  எடுத்துக் கொண்டு  வருவது  போன்ற  நிகழ்ச்சிகள்  சர்வ சாதாரணம். இதைத் தவிர்ப்பதற்காக ,  கதாசிரியர்  தன் கதா நாயகன்  மூலமாக  நமக்கு கொடுத்திருக்கும்  அறிவுரைதான் " செக் லிஸ்ட் " .  தான் சொல்ல நினைப்பதை  நேரடியாக  சொல்லாமல் ,  ( நகைச் ) சுவையாக , கதா நாயகனின்  செயல்களாக  விவரித்திருக்கிறார் . 

இந்த  செக் லிஸ்டில் கதாசிரியர்  பட்டியலிட்டு  இருப்பது :

அலுவலக அடையாள அட்டை, 
வீட்டு விலாசம் + தொலைபேசி எண்களுடன் கூடிய விசிடிங் கார்டு, 
பஸ் சார்ஜுக்கு வேண்டிய சரியான சில்லரைகளுடன் கூடிய மணிபர்ஸ், 
அதில் ஒரு தனி அறையில் ரிஸர்வ் கேஷ் ஆக ஒரு ஐநூறு ரூபாய் நோட்டு, மூக்குக்கண்ணாடி + அதற்கான கூடு, 
மூன்று வேளைகளுக்கான மருந்து மாத்திரைகள், 
டிபன் பாக்ஸ், 
வெற்றிலை பாக்குப்பெட்டி சுண்ணாம்பு டப்பியுடன், 
பல் குத்தும் குச்சிகள், 
காது குடையும் பஞ்சுக்குச்சிகள், 
கைக்கடிகாரம், 
பேனா, சின்ன பாக்கெட் நோட்டு, 
ஆபீஸ் ஃபைல்கள், 
செல்போன், சார்ஜர், 
ஆபீஸ் டிராயர் சாவி, 
குடை, 
பஸ்ஸில் படித்துக்கொண்டே போக ஏதாவது வார இதழ்கள் அல்லது செய்தித்தாள், பேண்ட், பெல்ட், பனியன், ஜட்டி, ஷர்ட், கர்சீஃப், 
துணிப்பை - ஆபீஸ் முடிந்து திரும்புகையில் காய்கறி  வாங்க ,
இடுப்பிலிருந்து அடிக்கடி நழுவிப்போகும் அரணாக்கயிறு, 
வேஷ்டி, துண்டு, 
செருப்புகள் . 

இந்த  பட்டியலில் , எதை தவறு என்று சுட்டிக் காட்ட முடியும் ?  அல்லது  தேவையற்றது என்று சொல்ல முடியும் ?  

வேஷ்டியும், துண்டும் , அரைஞாண்   கயிறும் சிரிப்பை  உண்டாக்கலாம் ! 

ஆண்களுக்கே  வரக்கூடிய  " குடல் இறக்கம் " என்ற நோயை எளிதில் தடுக்கக் கூடிய வழி இந்த அரைஞாண்  கயிற்றை  உபயோகிப்பதுதான் . இதை  அறிந்ததால்தான், கதாசிரியர் இதை  நாயகனின் செயலாக  விவரித்திருக்கிறார். 

வேஷ்டியும், துண்டும் பட்டியலில்  இடம் பெற்றதற்கு காரணம்,  நாயகனின்  சோகமான அனுபவம். "  அது நடந்து முடிந்த கதை, இப்போதுதான்  ஆடையெல்லாம்  சீராக  இருக்கிறதே, இந்த  வீண் சுமை எதற்கு ? " என்ற வாசகர்களின் கேள்விக்கு , நாயகனின் முன்னெச்சரிக்கைதான்  காரணம் என்பதுதான்  பதில். இந்த வேஷ்டியும் , துண்டும் இதுவரை  உபயோகப்படவில்லை,  ஆனால்  இதற்கு மேல் , கதாநாயகனுக்கோ அல்லது வேறு யாருக்கோ , சமயத்தில் சஞ்சீவியாக  உபயோகப்படலாம் அல்லவா ?

சனிகிழமை என்பதால்,  அரை நாள் மட்டும் ஆபீசில்  தலையைக் காட்டிவிட்டு  வீட்டுக் வந்த  கதாநாயகன் , மறு நாள்  சென்னை செல்ல வேண்டும் , தன் மகனுக்கு  பெண்         பார்ப்பதற்காக !  சாதரணமாகவே  முன் எச்சரிக்கையுடன்  சும்மா இருப்பாரா? 

மறுநாள்  சென்னை செல்ல தேவையானதை  எல்லாம்  " செக் லிஸ்ட் " போட்டு  சரி  பார்த்து வைத்து விட்டு, ஓட்டலில் இருந்து வந்த உணவையும் உண்டு விட்டு  உறங்க  ஆரம்பிக்கிறார். அப்போது  அவருடைய  எண்ணமெல்லாம், மறு நாள்  காலை,  6.30க்கு புறப்படும்  பல்லவன் எக்ஸ்பிரஸ்ஸை  தவற விடக்கூடாது  என்பது தான் ! 

உறங்கிக்  கொண்டிருந்த  அவரை  எழுப்பியது, மழை !  கடிகாரத்தைப்  பார்த்தார் . மணி  5.30.   

அவர் எண்ணமெல்லாம், 6.39க்குள்  ரயிலைப் பிடிக்க வேண்டும் என்பதுதான் !  போர்க்கால நடவடிக்கை போல , எல்லாவற்றையும் முடித்துக் கொண்டு, புறப்பட்டு விட்டார், ரயில் நிலையத்திற்கு ! 

கொட்டுகின்ற  மழையில்,  மரத்தில் இருக்கும்  கிளி பொம்மையை  குறி வைத்த  விஜயனைப் போல் , வேறு எதைப்பற்றியும்  யோசிக்காமல், கவலைப்படாமல்,  6.30க்கு  திருச்சியில் இருந்து புறப்படும் " பல்லவனை " பிடிப்பதற்காக, ஸ்ரீரங்கம்  இரயில்  நிலையத்துக்கும்  வந்து விடுகிறார், கதா நாயகன் ! 

இரயில்  நிலையத்தில்தான் தெரிகிறது, அவர்  ஞாயிறு  காலை 6.30க்கு  புறப்படும்  பல்லவன் எக்ஸ்பிரசுக்கு அவர் சனிக்கிழமை மாலை  6.30 க்கே  வந்திருப்பது !  அவரைப் பார்த்து எள்ளி நகையாடுவது, பிளாட்பாரத்தில் இருக்கும்  கடிகாரமும், வாசகர்களும் தான் !

இதற்கு காரணம், "  எவ்வளவு  முன் எச்சரிக்கையுடன்  இருந்தாலும், கடைசியில் கோட்டை  விட்டு விட்டாயே,  முன்னெச்சரிக்கை  முகுந்தா ,  வீட்டை விட்டு  புறப்படும் முன் , இன்று  என்ன  கிழமை என்று  பார்த்துவிட்டு  புறப்படக்கூடாதா ? "  என்ற எண்ணம்தான் ! 

ஆனால்.  கதா நாயகனின் தன்னம்பிக்கை  என்னை பிரமிக்க வைக்கிறது .    

" எல்லாவற்றையும்  சரி பார்த்துவிட்டேன், நான் செய்வது சரியே " என்ற கதா நாயகனின் எண்ணமும், தீர்மானமும் கதாநாயகனை பாராட்ட வைக்கிறது .

சிறு  தவறு  நடந்து விட்டது !  அதற்கு காரணம்,  அதிதமான  முன்னெச்சரிக்கையா ? அல்லது , அந்த பாழாய் போன  ஞாபக மறதியா ? இதற்கு  ஆறுதலாக  கதா நாயகன் , தனக்குத்தானே கூறிக் கொண்ட சமாதானம், " அன்றைய ராசி பலனில், அவருடைய ராசிக்கு குறிப்பிடப் பட்டிருந்த  ' வீண்  செலவும், வீண் அலைச்சலும் " .   

எனக்கு  நம்பிக்கை இருக்கிறது, அடுத்த முறை  கதா நாயகன் இந்த தவறை செய்ய மாட்டார்  என்று ! ஏனென்றால்,  " இன்றைய தேதியையும் , கிழமையையும் சரி பார்த்துக் கொள் "  என்ற வாசகம் அவருடைய  " செக் லிஸ்டில் "  சேர்ந்துவிடும் !!

o-o-o-o-o-o-o-o





















































என்று சகல சாமான்களையும் லிஸ்ட் போட்டு, வீட்டினுள் ஒரு பெரிய கரும்பலகையில் எழுதி, கண்ணில் படும்படியாக தொங்க விட்டிருப்பார். ஏழு மணிக்கு பஸ் பிடிக்க ஆறரை மணிக்கே ரெடியாகி லிஸ்டில் உள்ளபடி எல்லா சாமான்களையும் தினமும் ஒரு முறை சரிபார்த்துக்கொள்வார். பேண்ட், ஷர்ட், பனியன், ஜட்டி அணிந்து கொண்டுள்ளோமா, என்பது உள்பட


Sunday 1 June 2014



துளியில்  ஒரு கடல் ---  


விமர்சனப் போட்டிக்காக    திரூ. வை. கோபாலகிருஷ்ணன் 
அவர்களால்  தேர்ந்தெடுக்கப்பட்ட  கதை ,
அவர்  எழுதிய  
 "ஏமாற்றாதே ! ஏமாறாதே !! "    (  VGK 18  )
என்ற  சிறுகதை.

அதற்கான  இணைப்பு : 



கதையின்  தலைப்பிலேயே,  கதையின்  கருத்தைச்  சொல்லிவிட்டார் , ஆசிரியர்.  பிறரை   ஏமாற்ற நினைத்து ,  நீ  ஏமாந்து போகாதே !  என்றதொரு கருத்தினை  ஒரு  சாதாரண , அன்றாடம்  நடக்கும்  ஒரு  நிகழ்ச்சியின்  வாயிலாக  வெளிப்படுத்தியுள்ளார்.  கதையின்  ஊடே , சராசரி  மனிதர்களின்  எண்ணத்தையும் , நிலைப்பாட்டையும்   தெளிவாக எடுத்துரைத்திருக்கிறார் ,  கதாசிரியர். 

கதையின்  கடைசி வரியை  , வாழ்க்கையின்  யதார்த்தத்தை , விதியின் விளையாட்டை ,  துர் ஆசைகளின்  துரிதமான  முடிவுரையைக்  குறிப்பதாக " தான் செய்த தவறுக்கு சரியான தண்டனை கைமேல் கிடைத்து விட்டதாக உணர்ந்தார் " என்று எழுதியிருக்கிறார். 

இக்கதையில், கதா நாயகனின்  செயல்பாட்டை, மன நிலையை  பல  வித்தகர்கள்,  வித விதமாக  விமர்சித்து  விடுவார்கள் ! 

ஒரு  வயோதிக, அன்றாட வாழ்வாதரத்திற்காக  உழைக்கும்  பெண்மணியிடம் ,  தேங்காய்  வாங்குவதற்காக  பேரம்  பேசுவது  தவறல்ல,  ஆனால்,  அவளை  ஏமாற்றி  ஒரு தேங்காயை  திருடுவது  என்பது,  ஒரு பண்பான , நாகரீகமான , நல்ல நிலையில் , நல்ல உத்தியோகத்தில் இருக்கும் , மனிதனின்  செயலல்ல  என்பதைச்  சுட்டிக் காட்டவே,  திருடிய தேங்காயை  அழுகலாக்கி, செய்த தவறுக்கு சரியான தண்டனை கைமேல் கிடைத்து விட்டதாக  கதையை  முடித்திருக்கிறார்,  கதாசிரியர். 

" செய்த தவறுக்கு சரியான தண்டனை கைமேல் கிடைக்கும் "  என்ற வரியை  , ஒரு  சாதாரணமான வரியாகக்  கருத முடியவில்லை,  என்னால். 

" கடமையைச் செய் !  பலனை  நான்  தருகிறேன் ! "  என்று,   கண்ணனின் வாக்காக, கீதை கூறுவதின்  மறு மொழியல்லவா, இக்கதையின்  கடைசி   வரி ! 

" செய்த  தவறுக்கு  சரியான  தண்டனை  உண்டு " .  இக்கருத்தைச் சொல்லாத  புராணங்கள் உண்டா ?  அல்லது கதைகள்தான்  உண்டா ? 

இந்த ஒரு சிறிய வரிக்குள்  ஒளிந்திருக்கும்  கதைகள் எத்தனை, அறிவுரைகள் தாம்  எத்தனை , எத்தனை .. ?

எனக்குத் தோன்றிய சில  கதைகளைப் பட்டியலிட்டு,  விமர்சனத்தை  எழுதியிருக்கிறேன் !

அந்த விமர்சனம்..... இதோ !

O-O-O-O-O-O-O-O-O-O-O-O-O-O-O-O-O-O


கதையின்  தலைப்பிலேயே,  கதையின்  கருத்தைச்  சொல்லிவிட்டார் , ஆசிரியர்.  பிறரை   ஏமாற்ற நினைத்து ,  நீ  ஏமாந்து போகாதே !  என்றதொரு கருத்தினை  ஒரு  சாதாரண , அன்றாடம்  நடக்கும்  ஒரு  நிகழ்ச்சியின்  வாயிலாக  வெளிப்படுத்தியுள்ளார்.  கதையின்  ஊடே , சராசரி  மனிதர்களின்  எண்ணத்தையும் , நிலைப்பாட்டையும்   தெளிவாக எடுத்துரைத்திருக்கிறார் ,  கதாசிரியர். 


வண்டியில்  பெட்ரோலை  நிரப்பிக் கொண்டு,  ஒரு  பெரிய  செருப்புக் கடைக்கோ,  ஜவுளிக்கடைக்கோ, அல்லது  நகைக்கடைக்கோ சென்று  எதையும்  பேரம்  பேசாமல்,  பேச முடியாமல் ,  கேட்கும்  காசைக் கொடுத்து விட்டு  வரும்  மனிதர்கள்,  ஏழு ரூபாய்க்கு  வாங்கும்  தேங்காய்க்கு ,  அதுவும்  ஒரு  தள்ளாத,  வயது முதிந்த  கிழவியிடமோ  ,  அல்லது,  அன்றாட வாழ்வாதாரத்திற்காக  உழைக்கும்  சிறு வியாபாரிகளிடமோ,  பேரம்  பேசும்  அல்பத்தனத்தை  எள்ளி  நகையாடியிருக்கிறார் ,  கதாசிரியர்.  

இக்கதையின்  நாயகன் ,  பதினைந்து  வருடங்களுக்கு  முன்னாள்  நிறைவேற்ற  வேண்டிய  வேண்டுதலுக்காக , ஒரு கிழவியிடம்  பன்னிரண்டு  தேங்காய்களை  பேரம் பேசி ,  பதிமூன்று  காய்களை  எடுத்துக் கொண்டு,  பன்னிரண்டு காய்களுக்கு  மட்டும் கணக்குப்   போட்டு, காசைக்  கொடுக்கும்  போது   அதிலும்  விலையைக் குறைத்த ,
சாமர்த்தியமான  சந்தர்ப்பவாதி !  

அப்போதும்  ஒரு  ஆதங்கம் , அவனுக்கு !  பதினைந்து  வருடங்களுக்கு  முன்னரே ,  இந்த  பிரார்த்தனையை நிறைவேற்றி இருந்தால்,  இந்த  செலவு  மிகவும்  குறைந்திருக்குமே  என்று !  



" தான் செய்த தவறுக்கு சரியான தண்டனை கைமேல் கிடைத்து விட்டதாக உணர்ந்தார் "   என்ற  கடைசி  வரியுடன்  கதையை  முடித்திருக்கிறார்,  ஆசிரியர் . கதாசிரியரின் இந்த  கருத்துக்கு,   மாற்றோ  அல்லது  எதிர்  வாதமோ இருக்கவே  முடியாது !   

மற்றவர்களை  ஏமாற்றி  வெற்றி  பெற வேண்டும்  என்ற  எண்ணம்  படைத்தவர்களுக்கெல்லம்  கிடைத்த  பரிசு,   தண்டனையே ! பல  இடங்களில்  மரணமே  பரிசாக  வழங்கப்பட்டிருக்கிறது, புராணங்களிலும்,  கதைகளிலும் !  என் அறிவுக்கு எட்டிய  சிலவற்றைப் பட்டியலிடுகின்றேன் !

தேவர்களின் புகழையும் , செல்வத்தையும்  காப்பதற்காக ,  விசித்திர வசு 
என்ற  அசுர குருவை  குருவாகக் கொண்டு  ஒரு  யாகத்தை, பிரமனின்  ஆணைப்படி  தொடங்குகிறான் , இந்திரன்.  ஆனால்,  குருவாக  அமர்ந்திருக்கும்  அசுர  குரு , இந்திரனை ஏமாற்றி,  அசுரர்களுக்கு  ஏதுவான  மந்திரங்களைச் சொல்ல,  விபரீதமான  விளைவுகள்  ஏற்படுகிறது.  இந்திரனை  ஏமாற்றிய,  விசித்திர  வசுவுக்கு  கிடைத்த  தண்டணை ,  இந்திரனின்  வஜ்ராயுதத்தால்  மரணம்.

இராமாயணத்தில்,  இராவணனுக்கு  உதவுவதற்காக,  பொன்மானாக  வேடமிட்டு,  இராமனையும், சீதையையும் ஏமாற்றிய  மாரீசனுக்கு கிடைத்த பரிசு,  ராம பாணத்தால்  மரணம்.

அதே  இராமாயணத்தில்,  எதிரிகளை  வெல்ல வேண்டும்  என்ற  எண்ணத்தில்,  எதிரிகளின்  பலத்தில்  சரிபாதியை  கவர்ந்துவிடும்  வல்லமை படைத்த  ஒரு மாலையை அணிந்து கொண்டு ,  எதிரிகளை  ஏமாற்றி, தந்திரமாக  அவர்களை  பலமிழக்கச் செய்து,  பல  வெற்றிகளை  தனதாக்கிக் கொண்ட  வாலிக்கு  கிடைத்த பரிசு,  ராம பாணத்தால் மரணம். 

மகா  பாரதத்தில்,  தான்  ஒரு  அந்தணன் என்று  பொய் உரைத்து,  பரசுராமரை  ஏமாற்றி ,  வித்தை கற்றுக் கொண்ட  கர்ணனுக்கு  கிடைத்த பரிசு,  "  கற்றுக் கொண்ட  வித்தை,  தக்க சமயத்தில்  பயன்படாது  போகட்டும் "  என்ற  சாபமும்,  அதன் விளைவாக  அவன்  மரணமும் .

இங்கு,  மகா பாரத  நிகழ்வுகளை  மட்டும்  கருத்தில் கொள்கிறேன், என் துணைக்கு ! 

அன்று ,  பரசுராமரை   ஏமாற்றி, கற்றுக் கொண்ட  போர் வித்தைகளும் ,
தந்திரங்களும்  கர்ணனுக்கு  பயன் பட்டது,  பல நாட்டு  மன்னர்களை  வெற்றி கொள்ள !  அப்படி  கர்ணனிடம்  தோற்றுப் போன  மன்னர்கள்தாம் 
துரியோதனனுக்கு  துணையாய் இருந்தனர்,  மகா பாரதப் போரில் .

இன்று,  கதா நாயகன்  பையிலிருக்கும்  பதிமூன்று  தேங்காய்களில் ,
பன்னிரண்டு  காசு கொடுத்து  வாங்கியது,  மற்றொன்று   ஏமாற்றியது !
உச்சிப் பிள்ளையார்,  அடிவாரத்திலிருக்கும் கீழ்  பிள்ளையார்,  சுற்றியிருக்கும் வீதிகளில் உள்ள  பிள்ளையார்கள்  பத்து  என  மொத்தம்  பன்னிரண்டு  தேங்காய்களை பையிலிருந்து  எடுத்து  சிதறு காய்களாக  உடைத்திருக்கிறார்,  கதா நாயகன் .    அனைத்துக் காய்களும் மிகவும் அருமையாகவும், பளீரென்று வெளுப்பாகவும், நல்ல முற்றிய காய்களாகவும், தூள்தூளாக உடைந்து சிதறியிருக்கிறது.   வேலை  கிடைக்க வேண்டும்  என்ற  எண்ணத்தில்  பதினைந்து  வருடங்களுக்கு முன்னால்  நேர்ந்து கொண்டது , இன்று நிறைவேறியது,  வேலை  கிடைத்த பின்  சம்பாத்தித்த  பணத்தைக் கொண்டு வாங்கிய  தேங்காய்களால்.  அவர்  காசு கொடுத்து வாங்கிய  பன்னிரண்டு  தேங்காய்களும்  பயன்பட்டு விட்டது,  பிரார்த்தனையை  நிறைவேற்ற !

அன்று,  விஜயனை  வெற்றி கொள்வதற்காக  கர்ணன், பரசுராமரை  ஏமாற்றி     கற்ற வித்தை ,  பிரமாஸ்திரம்.  அது அவனுக்கு  உதவவில்லை,  விஜயனுடன்  போரிடும்போது ! 

இன்று,  நேர்த்திகடனை  செலுத்திவிட்டு,  தேங்காய்க்காரியிடம்  ஏமாற்றிய  ஒரு தேங்காயுடன்  வீடு  திரும்புகிறார்,  கதா நாயகன் .  உடைத்துப் பார்த்தால் , அந்த   தேங்காய்   அழுகல்.  பதிமூன்று தேங்காய்களில் , எது அழுகல் என்று  எடுத்தவருக்கும் தெரியாது,  விற்றவளுக்கும் தெரியாது. ஆனால் ,  ஒரே  பையிலிருந்த  13 காய்களில்,  12 நல்ல காய்கள் மட்டும்  சேர வேண்டிய  இடத்தை  சேர்ந்துவிட்டது.  ஏமாற்றிய  ஒன்று மட்டும் , ஏமாற்றியவருக்கு  பயன்படவில்லை ! 


இதை  விந்தை  என்பதா ?  விதி  என்பதா...  ?

எதுவாயிருந்தாலும்,  செய்த தவறுக்கு சரியான தண்டனை என்பதுதான்  தீர்வு. 

கதையின்     தலைப்பு  " ஏமாற்றாதே , ஏமாற்றாதே ,  ஏமாறாதே,  ஏமாறாதே ! "  என்ற  M . G . R . இன்  படப் பாடலை  நினைவுறுத்துகிறது.   அதுமட்டுமல்ல ,

ஒரு நீதிக்கும் நேர்மைக்கும் பயந்துவிடு 
நல்ல அன்புக்கும் பண்புக்கும் வளைந்து கொடு 
பொது நீதிக்கும் நேர்மைக்கும் பயந்துவிடு 
நல்ல அன்புக்கும் பண்புக்கும் வளைந்து கொடு 
இன்றோடு போகட்டும் திருந்தி விடு 
இன்றோடு போகட்டும் திருந்தி விடு 
உந்தன் இதயத்தை நேர் வழி திருப்பிவிடு

என்ற  மற்ற   வரிகளையும்  முணுமுணுக்க  வைக்கிறது. 

இன்றைய சமுதாயத்திற்கு நல்லதொரு  கருத்தினையும், படிப்பினையையும் ஊட்டக் கூடிய  ஒரு சிறந்த   கதையைப் படைத்த கதாசிரியருக்கு, ஆயிரம்  நன்றிகள்,  அனந்த கோடி நமஸ்காரங்கள் !!


O-O-O-O-O-O-O-O-O-O-O-O-O-O-O-O-O-O-O-O






   























 

























Tuesday 27 May 2014

சூ ழ் நி லை



திரு . வை. கோபாலகிருஷ்ணன்  அவர்களால் 
விமர்சனப் போட்டிக்காக தேர்தெடுக்கப்பட்ட  கதை,  
அவர் எழுதிய  "  சூழ்நிலை * 

இதற்கான இணைப்பு 


இந்த வாரம்  ஒரு  சின்னஞ்சிறு கதை  தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறது.   

அன்றாட  வாழ்க்கையில்  ஒரு சில  நிகழ்வுகள்  அல்லது  செயல்கள்  பல  தொடர்ச்சியான  நிகழ்வுகளுக்கு  வித்திட்டு விடுகின்றன.  சுற்றி இருக்கும் மனிதர்களின்  பாராட்டுக்களோ   அல்லது  இடித்துரைத்தலோ  அந்த  குறிப்பிட்ட  செயலை  மையப்படுத்தியே  இருக்கும் .  

ஒரு  சராசரி மனிதன்,    தன்  மகளுக்காக  திருமணத்தை பேசி  முடிக்கும்  சமயத்தில்,  கை பேசியின் மூலமாக  ஒரு துயரச்  செய்தியை  கேட்க  நேரிடுகிறது .  அந்த சமயத்தில்,  அவன்  வாயிலிருந்து  வெளிவரும்  வார்த்தைகளைப்  பொறுத்தே  அதன் பின் விளைவுகளும்  அமையும். அந்த  பின்  விளைவுகள்  சுபமானதாகவும்  இருக்கலாம் அல்லது  துயரமானதாகவும்   இருக்கலாம்.  எதுவாக இருப்பினும்,  இதற்கு காரணம் ,  அந்த மனிதனின் அந்த குறிப்பிட்ட  நேரத்தில் எடுக்கும்  சமயோசிதமான முடிவும், செயல்களும் தான்  . 

இதே நிகழ்ச்சி , இக்கதையின்  கதா நாயகனின்  வாழ்விலும்   நிகழ்கிறது.  தகவல் கிடைத்தவுடன் , கதா நாயகன் ரொம்ப ரொம்ப சந்தோஷம்மா,"  என்ற வார்த்தைகளைக் கூறுவதாக சித்தரிக்கப்பட்டு, இதன் பின் விளைவுகளாக  சில  நிகழ்ச்சிகளையும்  கூறுவதுதான்  கதை .

இதை  இப்படி செய்திருக்கலாமே,  அப்படி செய்திருக்கலாமே  என்று  எழுதுவதெல்லாம்  வெறும்  கற்பனைகளே !  இவை  எதுவும் ,  எழுதிய  கதையை  மாற்றிவிட முடியாது .  விமர்சனம் என்பது , நடந்து முடிந்த  நிகழ்ச்சிகளைப் பற்றிய  எழுத்தாளனின்  கண்ணோட்டம் . 


 இந்த  கதையில், பின் விளைவுகளாக  கூறப்பட்டிருக்கும்  நிகழ்வுகளை  விமர்சிப்பதா ?  அல்லது   கதையின்  ஆணி வேராக  இருக்கும் செயலை  விமர்சிப்பதா ?  

இன்றைய விமர்சனத்துக்கான  கதையில்,  கதா நாயகன் தன் மகளின்  திருமணத்தைப் பற்றி பேசிக் கொண்டிருக்கும்போது  கிடைத்த தகவலும் , அதை  அவர் கையாண்ட விதமும்தான்  முக்கிய நிகழ்ச்சி.  மற்றவை எல்லாமே  அதன்  பின்  விளைவுகள் தான் .

எனவே,  நான்  தேர்ந்தெடுத்தது,  கதையின்   முக்கிய  நிகழ்வை , ஆணிவேராக  இருக்கும்  கதாநாயகனின்  செயலை விமர்சிப்பது என்ற முடிவை !   அதையே மையமாக வைத்து  விமர்சனத்தையும் எழுதினேன் . 

என் விமர்சனம்  இதோ !  


விஞ்ஞானத்தின்   வெகு வேகமான  வளர்ச்சி  ,  இன்று   
அனைவரிடமும்  கை பேசி  இருப்பதுதான் .  
மிக  நல்ல  வளர்ச்சிதான். 

ஆனால் , இதன் மறுபக்கம்  மிக கொடூரமானது.
கைபேசியில் பேசிக்கொண்டே  சாலைகளில்  நடந்து 
செல்லும்  இளைஞர் களும், இளைஞிகளும் ,  சர்வ 
சாதாரண காட்சி இன்று.  கைபேசியில்  பேசிக்கொண்டே  
வாகனங்களை   ஓட்டிச் செல்லும்  காட்சிகளும்  
சர்வசாதாரணம்.   வாகனங்களை  ஓட்டிச்  செல்லும்போது  
கைபேசியில்  பேசக் கூடாது  என அரசாணை  இருந்தாலும், 
அதை மீறத் துடிப்பவர்கள்  ஏராளம்.  !  
இதனால்  ஏற்பட்ட  விபத்துக்கள்  ஏராளம் !  
இறந்தவர்களும்  ஏராளம் ! 

மற்றுமொரு  கொடுமை,  பாட்டு கேட்கிறேன்   பேர்வழி ,  
என்று  இரு  காதுகளையும்  அடைத்துக்கொண்டு ,  
பாட்டைத் தவிர   வேறு எந்த  சப்தத்தையும்  கேட்க  
முடியாமல் ,  விபத்துக்களில்  சிக்கியோரும்  ஏராளம். ! 

இவர்களின்  மறைவு, அவர்களின்  பெற்றோர்களுக்கு  
மட்டுமல்ல,  நாட்டிற்கும்  பேரிழப்புதான் !  

இந்த  ஞான  வளர்ச்சியின்  மற்றுமொரு  பக்கம்,  
ஏதாவது  பேசவேண்டுமா,  எடு  கை பேசியை,  
தொடர்பு கொள்  உடனே !  -  இத்தகைய  எண்ணம்  
கொண்டவர்கள்  ஏராளம், ஏராளம்.  

இவர்களுக்கு , தான்  தொடர்பு கொண்டவர்கள் , எந்த 
சூழ்நிலையில்  இருக்கிறார்கள் ?  அவரால்  இப்போது 
தம்மோடு  பேசமுடியுமா  அல்லது  தான்  பேச விரும்பும் 
விஷயத்தை  அவரால்  தொடர்ந்து  பேசமுடியுமா  என்பதைப் 
பற்றியெல்லாம்  கவலையே  இல்லை. 

தொடர்பு கொள்ளப்பட்டவர்தான்,  செவாலியர்  சிவாஜி 
கணேசனைப்போல்  , அழுதுகொண்டே  சிரித்தும்  அல்லது 
சிரித்துக்கொண்டே  அழுதும்  சமாளிக்க வேண்டும் !   

இத்தகைய  ஒரு  சூழ் நிலையை  மனதில் கொண்டு , 
திரு. வை.கோபாலகிருஷ்ணன்  எழுதியிருக்கும்   சிறுகதை, 
" சூழ் நிலை " . 

டில்லியில்  வசிக்கும்  ஒரு  " பிசினஸ்  மேக்னட் "  ஆக 
சித்தரிக்கப்படுகிறார்,  கதா நாயகன். 

சென்னை  சென்றுள்ள  அவர்  தன்  வேலைகளின் ஊடே 
தன்   மகளுக்கு  ஒரு  சம்பந்தத்தை  பேசி  முடிக்கும் 
தறுவாயில்,  கைபேசியில்  தொடர்பு கொண்ட  அவரது மகள் ,
தன்  தாத்தா (  அம்மாவின்  தந்தை )  சாலை விபத்தில்   
இறந்துபட்டதையும், அவரது உடல்  G.H. இல்  இருப்பதையும் 
தெரிவிக்கிறாள். 

சம்பந்தம் பேசப்பட்டு  முடிவடையும்  நிலையில் ,  இந்த  
மரணச்  செய்தி  ,  அனைத்தையும்  குலைத்துவிடுமல்லவா ? 
நொடியின்  பகுதியில்  , முகத்தில் எந்த சலனத்தையும்  
காட்டாமல்  , " ரொம்ப ரொம்ப சந்தோஷம்மா,"  என்ற 
வார்த்தையை  கதா நாயகன்  உச்சரிப்பதாக  ,  கதாசிரியர்  
காட்டியிருக்கும் விதம், கதா நாயகனின் வார்த்தைகள் 
 பொய்யென்றாலும், 
"  பொய்ம்மையும் வாய்மை யிடத்த புரைதீர்ந்த
     நன்மை பயக்கு மெனின்  " 
என்ற  வள்ளுவரின்  குறளை  நினைவுறுத்துவது  
பாராட்டத்தக்கது.

திருமணத்தைப் பற்றிப் பேசிக் கொண்டிருக்கும் போது , 
கிடைத்த  துக்கமான  செய்தியை வெளிக்காட்டாமல்,  
காலமறிந்து   , சாமர்த்தியமாக  அதை மறைத்து , திருமணத்தை  
உறுதிப் படுத்திக் கொண்டுவந்த கதா நாயகனின்  செயல், 
"  அருவினை யென்ப உளவோ கருவியாற்
     கால மறிந்து செயின்  " 
என்ற  வள்ளுவரின்  மற்றொரு குறளையும்   நினைவுறுத்துவது 
பாராட்டத்தக்கது. 

கதாநாயகனின்  இதே  செயல்,  
" ஒரு செயலைச் செய்யும்  மனிதனின் கண்ணோட்டம்,  
தான்  ஈடுபட்டுள்ள  செயலுக்கு  எத்தகைய 
சேதமும்  வராமல்  இருக்கவேண்டும் , அப்படியிருப்பின் 
அவருக்கு  இவ்வுலகமே சொந்தமாகும், "  
என்ற  கருத்தினைக் கொண்ட 
 (  கருமஞ் சிதையாமற் கண்ணோட வல்லார்க்கு 
    உரிமை உடைத்திவ் வுலகு. )
வள்ளுவரின்   மற்றும்   ஒரு  குறளை  வாசகர்களுக்கு  
நினைவுறுத்துவதும்   பாராட்டத்தக்கது.  

G.H. இலிருந்து  தன்  மாமனாரின்  உடலை  சீக்கிரமாகவே 
பெற்று, அவரின்  ஈமக் கிரியைகளுக்கு  ஏற்பாடு செய்து, 
தேவையான  பொருளுதவியும்  செய்து  மாமியாரின்  மனதில் 
நீங்கா  இடம் பிடிப்பவராக  கதா நாயகனைச்  சித்தரித்த  
விதத்தில், ஒரு குடும்பத்தின்  மருமகன்  என்பவர்,  அந்த  
வீட்டிற்கு  ஒரு  மறு  மகன்தான்  என்ற உணர்வை  , 
வாசகர்களுக்கு  உணர்த்திய  கதாசிரியர், 
கதாநாயகனின்  செயலை, 
 " இன்பம் விழையான் வினைவிழைவான் தன்கேளிர்
    துன்பம் துடைத்தூன்றும் தூண் "  
என்ற வள்ளுவரின்  குறளுக்கு ஏற்பவும்   அமைத்திருக்கிறார்.   

கோட்டீஸ்வரனான  கணவன் , தன்  பிறந்த வீட்டை  மதிப்பதேயில்லை
 என்ற  கருத்தைக் கொண்ட  கதா நாயகனின்  மனைவி , இறுதியில் 
வயது வந்த மகள்  பக்கத்தில்  இருக்கிறாள்  என்பதையும்  மறந்து,
 கணவனிடம்  சண்டையிட்டு, பின்  உண்மையுணர்ந்து  ,  தன மகள் 
பக்கத்திலேயே  இருப்பதை   மறுபடியும்  மறந்து,  கணவனின்
மார்பில்  சாய்ந்து சரணடையும்  விதம்  , கதாசிரியருக்கு  சபாஷ்  
சொல்ல வைக்கிறது .  

திருமணம் பேசும் போது  இடையே வந்த துக்கத்தையும், துன்பத்தையும், 
இன்பமாகக் கருதி , கதா நாயகன்  செயல்பட்ட  விதத்தில், 
 "    இன்னாமை இன்பம் எனக்கொளின் ஆகுந்தன்
      ஒன்னார் விழையுஞ் சிறப்பு." 
(   பொருள்:  துன்பத்தை இன்பமாகக் கருதும் மனஉறுதி கொண்டவர்களுக்கு, 
     அவர்களது பகைவர்களும் பாராட்டுகிற பெருமை வந்து சேரும்.. )
என்ற  மற்றும்  ஒரு  குறளை ,  வாசகர்களுக்கு  நினைவுறுத்துகிறார்,
கதாசிரியர்.

இக்கதையின்  ஆணி வேர் ,  கதா நாயகன்  தன்  மகளுக்காக  
திருமணம்  பேசி  முடிக்கும் தறுவாயில்,  மகளிடமிருந்து  வந்த  
துக்கச் செய்தியும்,  அதை  கதா நாயகன்  கையாண்ட  விதமும்தான். 

இக்கதை,  சிறு வயதில் படித்த  ' யானையைப் பார்த்த  குருடர்கள் "
கதையைத்தான்  நினைவுக்குக் கொண்டுவருகிறது ,
இக்கதையிலும்  கதா நாயகனாக  ஒரு  யானை !  பட்டத்து   யானை ! 


பெரிய பிஸினஸ் மேனாக இருப்பதால், எந்த வீட்டிலும், 
எந்த ஊரிலும், எந்த நாட்டிலும், ரொம்ப நேரம் தங்க முடியாத  
சுறுசுறுப்பான  யானை !

கதா நாயகனின்  செயலை , வெவ்வேறு  கண் கொண்டு 
பார்க்கும்  கதா  பாபாத்திரங்கள் .  

தன்  தாத்தாவின்  மரணத்தைத் தெரிவித்ததும் ,
“அப்படியாம்மா, ரொம்ப ரொம்ப சந்தோஷம்மா. நான் அவசியம் 
போய்ப் பார்த்துட்டு, அப்புறம் உனக்கு போன் செய்கிறேன்”  
என்ற தந்தையின்  பதிலைக் கேட்டு அதிர்ந்து போன  மகள். 

"  மாமனாரின் திடீர் மரணத்தைக் கேள்விப்பட்ட பிறகாவது ஒரு
    மனிதாபிமானத்துடன் பேச மாட்டாரோ! அவ்வளவு பணத்திமிரு ...... 
     இருக்கட்டும் நேரில் போய் பேசிக் கொள்கிறேன் "   என்ற  
பொருமலுடன்  சென்னை சென்று ,  அங்கும்  தன் கணவனுடன்  
பேசாமலே  இருந்த ,  கோபக்கார  மனைவி.

தன் கணவனை இழந்த துக்கத்தையும் மறந்து, தன் பணக்கார 
மற்றும் மிகவும் பிஸியான மாப்பிள்ளையைப் பற்றி அடிக்கடி 
பெருமையாகப் பேசி பூரித்துப் போகும்  மாமியார் .  

" யார்  எப்படிப் பார்த்தாலென்ன, என்னை!  நான்  என்  கடமையைச் 
செய்துவிட்டேன் !  நானும்  தங்கம் தான், என் உள்ளமும்  
தங்கம்தான் "  என்ற நினைப்புடன் ,  ஆர்ப்பரிக்காமல், 
அமைதியாய்  இருக்கும்  கதா நாயகன். 

எழுத்துக்களை  அழகாக, மிக அழகாக  பின்னலிட்டிருக்கிறார் .
ஆசிரியர். 

 திருவள்ளுவரின் , 
வாய்மை  என்ற  அதிகாரத்தின்  கருத்தினையும் 
காலமறிதல்  என்ற   அதிகாரத்தின்  கருத்தினையும் , 
கண்ணோட்டம்  என்ற  அதிகாரத்தின்  கருத்தினையும் ,
இடுக்கண்  அழியாமை  என்ற  மற்றொரு  அதிகாரத்தின்  கருத்தினையும்,
கதா நாயகனின்  ஒரே ஒரு செயலில்  புகுத்தி, 
கருத்தாழம் மிக்க  இந்த  கதையை  எழுதிய  விதம்  , 
இக்கதை ,  
கதாசிரியரின்   மற்றுமொரு  சாதனை  என்றே   
பாராட்ட வைக்கிறது

O-O-O-O-O-O-O-O-O-O-O-O-O-











  












.